No results found

    ஏழைகள் நலனுக்காக வக்கீல்கள் வாதாட வேண்டும்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

    சென்னை பெருங்குடியில் இன்று தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக வெள்ளி விழாவில் முதன்மை விருந்தினராக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டார். விழாவில் அவர் பேசியதாவது:- 1989-ம் ஆண்டு நூற்றாண்டு கண்ட சென்னை சட்டக்கல்லூரிக்கு, 'டாக்டர் அம்பேத்கர் சட்டக்கல்லூரி' என்று பெயர் சூட்டியவர்தான் அன்றைக்கு முதல்-அமைச்சராக இருந்த கலைஞர். 1997-ம் ஆண்டு சென்னையில் டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் உருவாக்கியவரும் கலைஞர்தான். அத்தகைய பல்கலைக்கழகத்திற்குத்தான், இன்றைக்கு நாம் வெள்ளி விழாவை எழுச்சியோடு, ஏற்றத்தோடு கொண்டாடிக்கொண்டு இருக்கிறோம்.

    2008-ம் ஆண்டு முதல்-அமைச்சர் கலைஞர் தலைமையிலான அரசால் சட்டப்பல்கலைக்கழக விரிவாக்கப் பணிகளுக்கென 15 ஏக்கர் நிலப்பரப்பினை பெருங்குடி பகுதியில் தகவல் தொழில்நுட்பப் பூங்கா வளாகத்திற்கு அருகில் ஒதுக்கீடு செய்யப்பட்டது. 2009-ம் ஆண்டிலும் தாம்பரம் பகுதியில் சட்டக்கல்வி வளர்ச்சிக்கென 2 ஏக்கர் நிலம் இப்பல்கலைக்கழகத்திற்கென முதல்-அமைச்சர் கலைஞர் தலைமையிலான அரசால் வழங்கப்பட்டது. இப்படி இதனை உருவாக்கியது முதல் சிறிது சிறிதாக வளர்த்தவர் முதல்-அமைச்சராக இருந்த கலைஞர். 40 மாணவர்களைக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்தப் பல்கலைக்கழகம், தற்போது ஏறக்குறைய 4500 மாணவர்களைக் கொண்டிருக்கிறது. தற்போது 11 முதுநிலைப் பிரிவுகளும் 5 இளங்கலைப் பிரிவுகளும் இருக்கின்றன. 250-க்கும் மேற்பட்ட மாணாக்கர்கள் சட்டம் மற்றும் ஆராய்ச்சிப் படிப்பினை படித்து வருகிறார்கள்.

    நமது அரசு அனைத்து தரப்பினருக்கும் தரமான உயர்கல்வியை கொண்டு சேர்க்க வேண்டும் என்ற முனைப்பில் தான், பல்வேறு சீரிய திட்டங்களை வகுத்து அதற்கு செயல்வடிவம் அளித்து வருகிறது. அனைத்து மாணவர்களை தகுதிப்படுத்தக்கூடிய வகையிலேதான் 'நான் முதல்வன்' திட்டத்தை தொடங்கி இருக்கிறோம். மகளிருக்கு வழங்கப்பட்டுள்ள இலவசப்பேருந்து சலுகை மாணவியருக்கு பெருமளவு உதவிகரமாக அமைந்துள்ளது. அரசுப் பள்ளியில் 6 முதல் 12ம் வகுப்பு வரை பயின்ற மாணவிகளுக்கு மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் கல்வி உதவித்தொகையாக மாதந்தோறும் 1000 ரூபாயை நமது அரசு இந்தக் கல்வியாண்டு முதல் சட்டம் பயிலும் மாணவர்களுக்கும் வழங்கி வருகிறது.

    அரசுப்பள்ளியில் பயின்ற கிராமப்புற மாணவர்களுக்குக் கல்வியில் உள்ஒதுக்கீடாக 7.5 சதவீதம் அளித்து, கல்வி மற்றும் உறைவிடக் கட்டணத்தை சட்டம் பயிலும் மாணவர்களுக்கு அமல்படுத்தி அரசே முழுவதுமாக ஏற்கும் ஆணையை நமது அரசு வெளியிட்டுள்ளது. எனவே நீங்கள் உங்கள் கல்வியில் மிகுந்த அக்கறை காட்ட வேண்டும், அந்த அக்கறையை வெளிப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். கடந்த 6.9.2021 அன்று 13 கோடி ரூபாய் மதிப்பீட்டில், அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய கூடுதல் இளங்கலைக் கல்வி வளாகத்தை காணொலி காட்சியின் மூலமாக நான் திறந்து வைத்தேன்.

    தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் மென்மேலும் பொலிவுற்று பல சட்ட மாமேதைகளை உருவாக்கி சமூகத்திற்கு நன்மக்களை வழங்கக்கூடிய நற்பணியில் பல நூற்றாண்டுகள் சிறந்து செயல்பட வேண்டும் என்று நான் இந்த நேரத்தில் கேட்டுக் கொள்கிறேன். உங்களது சட்ட அறிவை, வாதத்திறனை, ஏழை எளிய-ஒடுக்கப்பட்ட மக்களின் நீதிக்காக பயன்படுத்த வேண்டும் என்றும் நான் கேட்டுக் கொள்கிறேன். "சட்டம் ஒரு இருட்டறை அதில் வக்கீலின் வாதமே விளக்கு. அந்த விளக்கை ஏழைகளால் பெற முடியவில்லை" என்று பேரறிஞர் பெருந்தகை அறிஞர் அண்ணா அவர்கள் வருந்தினார்கள். அப்படி அமைந்து விடக்கூடாது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கிக் கொடுத்துள்ள அடிப்படை உரிமைகளைக்காக்க உங்களது கல்வியை நீங்கள் பயன்படுத்த வேண்டும். * பாதிக்கப்பட்டால் அதற்கு தீர்வு காணக்கூடிய உரிமை ஆகிய பல்வேறு உரிமைகளை அரசியலமைப்புச் சட்டம் சொல்கிறது. அதனைக் காக்கும் வழக்கறிஞர்களாக நீங்கள் திகழ வேண்டும். சட்டநீதியை மட்டுமல்ல - சமூகநீதியையும் நிலை நாட்டக்கூடியவர்களாக நீங்கள் விளங்க வேண்டும். மக்களுக்கு இன்றைய தேவை என்பது நீதி மட்டும்தான். அத்தகைய நீதியின் தூதுவர்களாக சட்டம் படிக்கும் நீங்கள் எதிர்காலத்தில் திகழ வேண்டும். உங்களது கட்சிக்காரர்களுக்கு வெற்றி தேடித்தரும் வழக்கறிஞர்களாக மட்டுமில்லாமல் - நீதிக்கு வெற்றி தேடித்தரும் வழக்கறிஞர்களாக நீங்கள் விளங்க வேண்டும். விழாவில் அமைச்சர்கள் ரகுபதி, மா.சுப்பிரமணியன், செஞ்சி மஸ்தான் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.
    Previous Next

    نموذج الاتصال